உத்தரகோசமங்கை மரகத நடராஜர் உருவான வரலாறு
உத்தரகோசமங்கை மரகத நடராஜர் உருவான வரலாறு
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார்.
உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார்.
தினந்தோறும் பாய்மரப் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென கடலில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது.
அப்படியே வெகு தூரம் சென்றபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்துவிட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது.
மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மண்டபம் நோக்கி திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு எந்த திசையில் இருக்கிறோம் என்பது தெரியவில்லை. உடனே அவர் தினமும் வணங்கிவரும் மங்களநாத சுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார்.
பாறை மின்னுவதை பார்த்த மரைக்காயர்
கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக்கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுக்கு படிக்கல்லாக போட்டு வைத்தார்.
வீட்டுக்குள் சென்று வருபவர்கள் அந்த பாறைக்கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது. பாறை மின்னுவதை பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்தார்.
அந்த மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப்பாறை உள்ளது என்று தெரிவித்தார்.
பாண்டிய மன்னரும், மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்த அந்த பாறைக்கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார்.
பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழியனுப்பி வைத்தார்.
விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல்
மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல்லில் ஒரு நடராஜர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராஜர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான ரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராஜர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பினார்.
சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கி சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார்.
சித்தர் சண்முக வடிவேலர்
அப்போது நான் மரகத நடராஜர் சிலையை வடித்து தருகிறேன், மன்னா கவலை வேண்டாம் என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர்.
உடனே மன்னரின் கவலை நீங்கியது. மரகத நடராஜர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். சித்தரும் அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராஜரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி வடித்தார்.
பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராஜ மூர்த்தியை பிரதிஷ்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும்படி அறிவுறை கூறினார். மன்னரும் அப்படி செய்தார். இதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி