திருவாதிரை சிறப்பு திருப்பதிகம்
திருவாதிரை சிறப்பு திருப்பதிகம்
திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் திருமடத்தில் அப்பர் பெருமான் சந்தித்தாா். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி “ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!” என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.
“ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே”
என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.
தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!
முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.
வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும் படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.
நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.
செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்ல
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும்.
பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்த
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.
ஆரூரா தியாகராஜா…