63 நாயன்மார்கள்

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

  • திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம்
  • இறைவர் திருப்பெயர் : நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டு நாதர்.
  • இறைவியார் திருப்பெயர் : பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல் நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)
  • திருமுறை : ஏழாம் திருமுறை 85 வது திருப்பதிகம்
  • அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

ஆலயத்தின் வரலாறும் சிறப்புக்களும்

மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக்கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச்செய்துள்ளனர். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதென்பர்.

சுந்தரரும், அருணகிரிநாதரும் பாடிய தலம் சுந்தரர் திருமுதுகுன்றம் சென்ற போது, இத்தலத்தை வணங்காமற் செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழியாதெனக் கேட்க, “கூடலையாற்றூருக்கு வழி இஃது” என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.

பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.கொடிமரம், பலிபீடம் இல்லை. மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சிறப்பானது – சித்ரகுப்தர் ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சித் தருவது. (இம்மூர்த்தம் பிற்காலத்தில் பிரார்த்தனையாக ஒருவரால் செய்து வைக்கப்பட்டதாகும்).

இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. இரு அம்பாள் சந்நிதிகளில் – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும், ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் தரப்படுகிறது. மதிலின் வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் உள்ளது.

சிதம்பரம் – காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில் “குமாரகுடி” வந்து, ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, “காவாலகுடி” சாலையில் திரும்பி, 2 கி..மீ. சென்று “காவாலகுடி” யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.

shivathuli-Viruthagirishwarar-Temple-Vriddhachalam_

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புறம்பயத்திலிருந்து பல தலங்களையும் வணங்கிக் கொண்டு செல்லும் பொழுது திருக்கூடலையாற்றூர் சார அதனையடையாது திருமுதுகுன்றத்தை நோக்கிச் செல்லுகின்ற பொழுது வழியில் பெருமான் வேதியர் வடிவங்கொண்டு நம்பியாரூரர் முன் நின்றார்.

நம்பியாரூரர் எதிரில் நின்ற வேதியரை வணங்கி, “திருமுதுகுன்று எய்துதற்கு வழி இயம்பும்” எனக் கூற, பெருமானும், “கூடலையாற்றூர் ஏறச்சென்றது இவ்வழி தான்” என்று கூறி, வழித்துணையாய்ச் சென்று மறைந்தருளினார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்தவர் பெருமானே என்று அதிசயித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.


பாடல் எண் : 01
வடியுடை மழுவேந்தி மதகரி உரி போர்த்து
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 02
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும்
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே
கொய்யணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 03
ஊர்தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 04
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 05
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்
சோதி அது உருவாகிச் சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 06
வித்தக வீணையொடும் வெண்புரிநூல் பூண்டு
முத்தன வெண் முறுவல் மங்கையொடும் உடனே
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 07
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும
குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 08
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும்
பிறை நுதல் மங்கையொடும் பேய்க்கணமும் சூழக்
குறள்படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 09
வேலையின் நஞ்சுண்டு விடையது தான் ஏறி
பாலன மென்மொழியாள் பாவையொடும் உடனே
கோலம் அது உருவாகிக் கூடலையாற்றூரில்
ஆலன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

பாடல் எண் : 10
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்று அறுமே.

ஓம் நமசிவாய…! சிவாய நம ஓம்…!”
“திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்’

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago

கண்ணப்ப நாயனார் வரலாறு

தாய், தந்தை அற்றவர், பிறப்பு, இறப்பு என அனைத்தையும் கடந்தவர் ஈசன் என குறிப்பிடுகிறோம்.உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும், படியளப்பவனாக…

4 weeks ago