AnmegamHistory's

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம்

தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்
– ஸ்ரீ மூகாம்பிகை இருப்பிடம்

தாயே, நீலமேக ரூபமான, மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிபூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது.
– ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரி

தற்போது நாம் மணிபூரகச் சக்கரத்தைப் பற்றி ஆழமாக பார்க்கலாம்…..
மணிபூரகச் சக்கரம் இருக்கும் இடமும் அதன் வடிவமும்:

மணிபூரகச் சக்கரம் இருக்கும் இடம் மனித உடலின் நாபிப்(தொப்புள்) பகுதியாகும். இது சுவாதிஷ்டானத்திற்கு எட்டு விரற்கடைக்கு மேல் உள்ளது. இந்தச் சக்கரம், வட்டம், வட்டத்தினுள் மேல் நோக்கிய பிறைச்சந்திரனை உள்ளடக்கிய‌ பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை வடிவானது.

ஜடராக்னி எனப்படுகின்ற தகிக்கும் ஜ்வாலையை மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். ஜ்வாலை இருக்கும் இடம் முக்கோணத்தால் குறிக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் பிளவு பட்ட ரத்தினம் போல் ஒளிர்வதால் “மணிபூரகம்” எனப்பட்டது. பத்துத் தாமரை இதழ்களும் பத்து யோக நாடிகளைக் குறிக்கும்.

manipooragam-chakra-tripuram-vadham-lord-shiva-shivathuli
manipooragam-chakra-tripuram-vadham-lord-shiva-shivathuli

அந்த நாடிகளின் சப்த பரிமாணம், டட, ணத, தத, தந, பப, என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இதன் மையத்தில், “நமசிவாய” மந்திரத்தின், “ம” என்ற எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் பீஜ மந்திரம் “ரங்” ஆகும். இதை முறையான பயிற்சி மூலம் உருவேற்றினால, குண்டலினி மணிபூரகத்தை அடைந்து இந்தச் சக்கரம் மலரும்.

இந்தச் சக்கரம் மலரும் போது, உடல் உறுதி பெறும். என்ன நேர்ந்தாலும் மனம் அமைதியுடன் இருக்கும். சுறுசுறுப்பும், கடுமையாக உழைக்கும் திறனும் கிடைக்கும். வயிறு, சிறுகுடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உடல் உறுப்புகள் இச்சக்கரத்துடன் தொடர்புடையன.

இந்தச் சக்கரத்தின் அதிதேவதை, ஸ்ரீ விஷ்ணுவும் லாகினி தேவியும் ஆவார்கள். ஆண்தெய்வம் ருத்திரன் என்றும் சில நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. மணிபூரகச் சக்கரத்தில் தேவி, இச்சாசக்தி ரூபிணியாக எழுந்தருளியிருக்கிறாள். அம்பிகையின் அருட்கருணை, மணிபூரகச் சக்கரத்தில் பொழியும் விதத்தை, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பின்வரும் ஸ்லோகங்களால் துதிக்கிறது.

மணிபூராப்ஜ -நிலயா வதனத்ரய- ஸ‌ம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி -ராவ்ருதா
ரக்த வர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன -ப்ரீத -மானஸா
ஸ‌மஸ்த- பக்த-ஸுகதா லாகின்யம்பா- ஸ்வரூபிணி.

இதன் பொருள், மணிபூரகச் சக்கரத்தில், அம்பிகை, மூன்று முகங்களை உடையவளாக, வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தரித்தவளாக, டாமரி தொடங்கி பத்து சக்தி தேவதைகளால் சூழப்பட்டவளாக இருக்கின்றாள்.

இந்தச் சக்கரத்தில் ரத்தச் சிவப்பு வண்ணத்துடன், லாகினி என்ற பெயருடன் எழுந்தருளும் தேவி, உயிரினங்களின், தசைப் பகுதியில் உறைபவளாக, வெல்லம் சேர்த்துச் சமைக்கப்பட்ட அன்னத்தை (சர்க்கரைப் பொங்கல்) விருப்பத்துடன் ஏற்பவளாக, பக்தர்களுக்கு சுகத்தை அருளுபவளாக இருக்கிறாள்.

இதிலிருந்து, நாம் அறிய வேண்டுவது என்னவென்றால், ஒவ்வொரு சக்கரங்களிலும் மனித உடலின் எந்தெந்த பாகத்தில் தேவி உறைவதாகக் கூறப்பட்டிருக்கிறதோ, அந்தந்த உடல் பாகத்தை வலிவூட்டும் சக்தி படைத்த உணவினை அந்தந்தச் சக்கரங்களில் வாசம் செய்யும் தேவி விரும்பி ஏற்கிறாள் என்பதே.

மேலும்
“மூலாதாரைக நிலயா பிரம்மக்ரந்தி விபேதினி
மணிபூராந்தருதிதா விஷ்ணு கிரந்தி விபேதினி”
மணிபூரகமும், அநாகதமும் சேர்ந்து, சூர்ய கண்டமாக அறியப்படுகிறது. அக்னிக் கண்டத்திற்கும் (மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் இணைந்த பகுதி), சூர்யக் கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பிரம்மக் கிரந்தி இருப்பது போல், சூரியக் கண்டத்திற்கும், சோமக் கண்டத்திற்கும் (விசுத்தி, ஆஜ்ஞா சேர்ந்த பகுதி) இடைப்பட்ட பகுதியில் விஷ்ணு கிரந்தி இருக்கிறது.

விஷ்ணு கிரந்தி அறுபடும் போது, ஆன்மாவுக்கு, ஸ்திதி வாசனையிலிருந்து விடுதலை கிட்டும். விஷ்ணு கிரந்தியை அறுக்கும் முகமாக, தேவி, மணிபூரகத்தின் வழியே மேலேறுகிறாள் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். சீல முனிவோர்கள் செறியு மலை சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை ஞான நெறி காட்டு மலை ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை (குரு நமசிவாயர், அண்ணாமலை வெண்பா).
என்று நாளும் புகழப்படும் திருவண்ணாமலை, திருக்கயிலாயமலை வாசனின் திவ்ய நாமம் போற்றும் சிவயோக நெறியில் மணிபூரகத்தலமாகத் திகழுகிறது.

அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மையும் அரசோச்சும், அண்ணாமலையில், கண்ணால் காண முடியாத சித்தர்களும், எண்ணிலடங்கா பக்தர்களும் நித்தம் வந்தித்துத் தொழுவது கண்கூடு. ஸ்ரீ ரமணர், ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் முதலான‌ ஆன்மீகக் குருமார்களின் பாதம் பதிந்த புண்ணிய பூமி. மலையே சிவமாக, அருளும் மகத்தான க்ஷேத்திரம். உமையவள் தவமிருந்து, சிவனார் இடப்பாகம் பெற்ற ஒப்பிலாத் திருத்தலம்.

சிவனாரின் திருவடிகளை மறவாமல் சிந்திக்கும் சித்தர் பெருமக்கள் பாடிய பாடல்கள் பலவற்றில் ஆதாரச் சக்கரங்கள் பற்றிய செய்திகள் அளவில்லாமல் இருக்கின்றன. சைவசமய‌த்தின் உயிர்நாடியாம் சைவசித்தாந்த நெறியை உலகுக்கு உணர்த்திய மெய்கண்ட சிவனார் இயற்றிய சிவஞான போதத்தில், அவர், மனதால் சிவனாரை சிந்தித்து, நமசிவாய மந்திரத்தை ஓதி, குண்டலினி யோகம் செய்தால் சிவசாயுஜ்ய நிலையை அடையலாம் என்று வலியுறுத்துகிறார்.

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடமை கண்டு அரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் அஞ்செழுத்தால்
குண்டலினியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு (மெய்கண்டார், சிவஞான போதம்
ஆறெ னுந்தலங் களின்முறை யறிந்தவா சாரப்
பேற டைந்தவன் றனக்கிலிங் கத்தலம் பிறங்கக்
கூறி டுஞ்சிவ பிரா னரு ளாகமங் குறித்து
மாறொ ழிந்திடு சீவன்முத் தியில்வழங் குவவாய்.
– சிவப்பிரகாசர், சித்தாந்த சிகாமணி

இந்தப் பாடலின் பொருள்:-

அங்கஸ்தலமானது ஆறு வகைப்படுவது போல, லிங்கஸ்தலங்களும் ஆறு (ஆசாரலிங்கம், குருலிங்கம், சிவலிங்கம், ஜங்கமலிங்கம், பிரசாத லிங்கம்,மகாலிங்கம் ) வகைப்படும். இதில் சிவபெருமான் சிவலிங்க வடிவினராக, மணிபூரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது சைவசித்தாந்தம் காட்டும் நெறி. மூலாதாரத்தில் ஆசாரலிங்கமாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் குருலிங்கமாகவும், அனாகததில் ஜங்கமலிங்கமாகவும், விசுத்தியில் பிரசாத லிங்கமாகவும், ஆஜ்ஞா சகரத்தில் மகாலிங்கமாகவும் சிவனார் எழுந்தருளுகிறார்.

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய, சைவ சித்தாந்தக் கருத்துக்களின் சாரமாக விளங்கும்
“உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே”

என்று சித்தர்களுள் ஒருவரான‌ திருமூலர் “உந்திக்கமலம்” என்று மணிபூரகத்தைக் கூறுகிறார்.

இந்தப்பாடலில் “சந்திரயோகம்” குறிப்பால் உணர்த்தப் பெறுகிறது. முறையாக, குரு தீட்சை பெற்று, யோகம் பயிலும் போது, யோகத்தின் குறிக்கோளாகிய சிவனாரின் திருக்காட்சி தோன்றும் முன், சூரிய சந்திரர்களின் ஒளியைப் பெற்று, ஆன்மா ஒளிரும் திருக்காட்சியைக் கண்முன் காணலாம் என்பது “தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான்” என்பதன் பொருள்.

இருவிழிகளிலுமுள்ள, விழித்திரை, பாவை, கண்மணி ஆகியன சேர்ந்து ஆறு வட்டங்கள். குரு தீட்சை மூலம் யோகநெறி சித்திக்கும் போது, ஆறு வட்டங்களின் ஒளி ஒருங்கிணைந்து, சிவனார் திருக்காட்சிக்கு முன் யோகப்பார்வையில் ஆறுமுகன் தோன்றுவான் என்பதே “தந்தைக்கு முன் மகன்” என்பதன் கருத்து என்றும் கூறுவர்.

மூலாதாரத்தில் விநாயகர் திருக்காட்சி பெற்ற பின்பே, படிப்படியாக‌ யோக நெறி கைகூடி, சிவ சாயுஜ்ய பதவி அடைய இயலும் என்பதே இவ்வரிகளின் உட்பொருள் என்றொரு கூற்றும் உண்டு. சிவபெருமான் எட்டு விதமான வீரச்செயல்கள் புரிந்த தலங்கள் அட்ட வீரட்டானத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை,

கஜ சம்ஹார மூர்த்தி
(1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்த தலம்
(2) திருக்கோவலூர் : அந்தகாகரனைச் சம்ஹாரம் செய்த‌ இடம்
(2) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
(4) திருப்பறியலூர் : தக்கன் தலையைக் கொய்த‌ தலம்
(5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
(6) திருவழுவூர் : கயமுகாசுரனை சம்ஹாரம் செய்து,அவன் (யானை) தோலை போர்த்துக்கொண்ட தலம் (கஜ சம்ஹார மூர்த்தி)
(7) திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
(8) திருக்கடவூர்: மார்க்கண்டேயனைக் காக்க, எமதர்ம ராஜனை உதைத்த தலம்.

திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரம், பத்தாம் திருமுறையில் பதிவலியில் வீரட்டம் எட்டு என்ற பகுதியில் இந்த வீரச்செயல்களுக்கு, குண்டலினி யோக அடிப்படையில் தத்துவ விளக்கம் கொடுத்தருளுகிறார்.

“அதில் எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்துஅவன் தாள்உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண்டானே”

என்ற பாடல், மணிபூரகத் தத்துவத்தினை உள்ளடக்கியது இதன் பொருள்,

எங்கும் நிறைந்தும், எல்லா உலகத்துக்கும் ஆதாரமாகவும், முடிவில் எல்லாம் சென்று ஒடுங்குவதற்கு இடமாயுமுள்ள இறைவனது திருவடிகளின் பெருமையை உணர்ந்த தேவர்கள் போகம் செய்யும் காலத்து, ஆணவம் கொண்ட பிரமனை அடக்குவதற்காக, மணிபூரகத்திலிருந்து கொண்டு, கவர்ச்சிகரமான ஒளியைத் தந்து கொண்டிருந்த திருமாலின் கவர்ச்சியை (ஈர்ப்புத் திறனைப்) போக்கி அருளினார் (நான்முகனார் திருமால் உந்தியிலிருந்து தோன்றியதால்) சிவபெருமான் என்பதாகும்.

சிவனாரின் திருக்குமாரரான‌ எம்பெருமான் முருகவேள் திருவண்ணாமலையில் நிகழ்த்திய லீலைகள் எண்ணற்றவை. திருவண்ணாமலை கோபுரத்தின் மேலிருந்து குதித்த ஸ்ரீ அருணகிரிநாதரைத் தாங்கிப் பிடித்து, அவருக்கு “சொல்லற, சும்மாயிரு” என்று ஞானோபதேசம் செய்து, பின் அவருக்கு, “முத்து” என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்று தொடங்கும் திருப்புகழைப் பாடியருளினார்.

“சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய ……பெருமாளே”
அருணகிரிநாதர் திருப்புகழ்

இதில், அருணை (திருவண்ணாமலையில்) ஏழு நிலைகள் (ஆதாரச் சக்கரங்கள்) விளங்கும் மலையின் உச்சியில், மயிலின் மேல் உலவியவாறு ஞான விளக்கம் தரும் பெருமாளே, என்று அருணகிரிநாதர் முருகனைப் பாடுகிறார்.

இதில் ஏழு நிலைகள் கொண்ட மலை என்று தன்னை உருவகப்படுத்தி,முருகப்பெருமான், திருவண்ணாமலையில், ஞானாசிரியானாக வந்து தம்மை ஆட்கொண்ட திறத்தையே இவ்விதம் புகழ்கிறார் அருணகிரியார்.

தமிழ்க் கடவுள் கந்தப் பெருமானின் பெருமை கூறும் கௌமாரத்தில், மணிபூரகச் சக்கரத்துக்கான தலம், “திருஆவினன் குடி” எனப் பெயர் பெற்ற, பழனி. துறவுக்கோலத்தில் நின்றாலும் பக்தர் வரவு கண்டு மகிழ்ந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தருளும் வள்ளல் பிரான் முருகன்.

குன்றுதோராடும் குமரக் கடவுள் இங்கு சித்தருக்கெல்லாம் சித்தனாக, பக்தருக்கு முக்தியின்பம் அருளும் குகக் கடவுளாக இங்கு அருள்மழை பொழிகிறான்.

நவபாஷாணத்தால், பழனி முருகன் சிலையை உருவாக்கிய போக மஹரிஷி, தன் சிவயோக ஞானம் எனும் நூலில்,
“தானென்ற மௌனமணி பூரகந்தான்
சானகியும் மால் நிற்கும் ஒளியைப்பாரு”

என மணிபூரகத்தின் தன்மையினைக் கூறுகிறார். இதில் “சானகியும் மால்” என்பது இலக்குமி தேவியுடன் கூடிய திருமாலைக் குறிக்கும். “நிற்கும் ஒளி” என்பது மணிபூரகத்தின் மத்தியில் ஒளி வீசும் ஜடராக்னியைக் குறிக்கும்.

இந்த அக்னியின் ஒளி மங்குமாயின் உயிர்கள் நோய்வாய்ப்பட்டு அல்லல் பட நேரும். இந்த அக்னியே, உணவைச் செரிக்கச் செய்து, நம்மை வாழ்விக்கிறது. உடலின் எல்லாப் பாகத்துக்கும் இந்த மையத்திலிருந்தே சக்தி அனுப்பப்படுகிறது.