Anmegam

பெண்களை குறைத்து மதிப்பிட்டு இழிவு படுத்துபவர்களை அங்கம் வெட்டிய என்னப்பன் சிவன்

பெண்களை இழிவுபடுத்துபவர்களை அங்கம் வெட்டிய சிவன்

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து பக்தியுடன்

குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்று இருந்தது. முதியவர் ஒருவர் தனது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவரது மனைவியின் பெயர் மாணிக்கமாலை

அழகிலும் அழகு பேரழகு பெட்டகமாக அவள் திகழ்ந்தாள். முதியவருக்கேற்றபடி இல்லாமல் இளமை தவழும் முகத்துடன் இருந்தாள்.

அவளை பயிற்சிக்கு வந்த மாணவன் ஒருவனின் ஓரக்கண் அடிக்கடி வட்டமிட்டபடியே இருந்தது. அவனது பெயர் சித்தன்.

வாள் வித்தையில் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான். அவனது வாள்வீச்சை சக மாணவர்கள் பாராட்டினர். ஒருவனுக்கு பாராட்டு கிடைக்கும் வரை அதற்காக ஏங்குவான்.

கிடைத்து விட்டால் மிருகமாக மாறி விடுவான். தன்னை விட பெரிய ஆள் மதுரையில் இல்லை என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

அந்த மமதையுடன் தனது பெயரில் சொந்தமாக மற்றொரு வாள் பயிற்சிக் கூடத்தை ஆரம்பித்தான். அவனே பலருக்கு பயிற்சி கொடுத்தான்.

செல்வமும் கொட்டியது இதன்பின்னர் அகம்பாவம் அதிகரித்தது. மாணிக்கமாலையை தொடர்ந்து நோட்டமிட்டான். குரு இல்லாத நேரங்களில், அவரது வீட்டிற்கு வருவான். தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுப்பான்.

அவளைப் போல் அழகி யாருமில்லை என்று கவர்ச்சியாகப் பேசுவான். குருபத்தினியோ, அவனது பேச்சின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவனை வெறுத்து ஒதுக்கினாள்.

அவளை அடைந்தே தீர வேண்டும்

நாட்கள் நகர்ந்தன. ஒருமுறை, அவளை அடைந்தே தீர வேண்டுமென்ற வெறியோடு, குரு வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான். கதவைத் தாழிட்டான். மாணிக்கமாலை அதிர்ந்து விட்டாள்.

என் ஆசைக்கு இணங்குகிறாயா, இல்லையா? என்று அவளை மிரட்டினான். மாணிக்கமாலை அவனுக்கு தக்க அறிவுரை கூறினாள். ஆனால், அந்த காமந்தகன் கேட்பதாக இல்லை. அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவள் அலறினாள்.

எப்படியோ, அவனைப் பிடித்து கீழே தள்ளினாள் மாணிக்கமாலை. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அந்தக் கொடியவனும் வெளியே வந்து, அடியே! இன்று நீ தப்பிவிட்டாய், ஆனால், என்றாவது ஒருநாள் உன்னை அடைந்தே தீருவேன், என சவால்விட்டு விட்டு சென்றுவிட்டான்.

மாணிக்கமாலை அழுதாள். ஆனால், கணவரிடம் இதுபற்றி ஏதும் சொல்லவில்லை. கணவரிடம் சொன்னால், அவர் வாளெடுத்துச் செல்வார்.

சிஷ்யனிடம் சண்டை போடுவார். ஒருவேளை அந்த சண்டையில் அவர் கொல்லப்படலாம், அல்லது சிஷ்யன் கொல்லப்படலாம்.

எதுவானாலும், அது அவருக்கு அவமானத்தையே ஏற்படுத்தும். சிஷ்யன் கொல்லப்பட்டால், ஒரு குருவே இப்படி செய்யலாமா? சின்னஞ்சிறுவனை ஒரு குரு வெல்வது என்ன உலகில் அதிசயமா? என்ற பேச்சு எழும். அவர் தோற்றால், ஒரு சிறுவனிடம் தோற்றானே இந்தக் கிழவன் என்ற அவமானச்சொல் காதுகளைத் துளைக்கும்.

அதைக் கேட்டு அவர் உயிரையே விட்டாலும் விட்டு விடுவார். இந்த இக்கட்டான நிலையில் அவள் சோமசுந்தரப்பெருமானை நாடிச் சென்றாள். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து அன்னை மீனாட்சியிடம், தாயே! பராசக்தி, அம்மா! ஜகத்காரணி, உன் ஆட்சி நடக்கும் மதுரையில் இப்படி ஒரு அநியாயம் நடக்கலாமா? பத்தினிப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அவச்சொல் உனக்கு வரலாமா? இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் எனக்கு, அந்தக் கயவனிடமிருந்து விடுதலை கொடு. அவனை அழித்து விடு, என்று கதறினாள்.

காமனை எறித்த அண்ணலே!

பின்னர் சோமசுந்தரர் சன்னதிக்குச் சென்று, மதுரை வேந்தே! என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் கடன் அல்லவா? திருவடி தூக்கி உலகையே ஆட்டுவிக்கும் நடராஜா! குஞ்சிதபாதா! யாராலும் அணுக முடியாத அருணாச்சலனே! காமனை எறித்த அண்ணலே!

எனக்கு அந்தக் காமாந்தகனிடமிருந்து பாதுகாப்பு கொடு என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

நியாயமாக வேண்டியோர்க்கு வேண்டிய வரம் தரும் மீனாட்சி சுந்தரேசுவரர் இதயத்தையே அவளது அழுகுரல் இளக்கி விட்டதோ என்னவோ! அவள் வெளியேறியவுடன், அண்ணலும் கிளம்பி விட்டார்.

மாணிக்கமாலையின் கணவரைப் போலவே வேஷமிட்ட சிவன் சித்தன் நடத்திய பயிற்சிக்கூடத்துக்கு வந்தார். குருவைக் கண்டதும் சித்தன் அதிர்ந்து விட்டான். மாணிக்கமாலை ஏதாவது சொல்லிக் கொடுத்து இங்கே வந்திருக்கிறாரோ? என்னாகப் போகிறதோ என கலங்கினான். குருவாக வந்த சோமசுந்தரரோ அதுபற்றி எதுவுமே பேசவில்லை. மாறாக வம்புக்கு அவனை இழுத்தார்.

நீ நினைத்தால் என்னுடன் வாள் போருக்கு வா

சித்தா! ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்கக்கூடாது. அதுபோல், ஒரே ஊரில் இரண்டு வாள் பயிற்சிப்பள்ளிகள் இருப்பதையும் நான் விரும்பவில்லை. நீ திறமையான மாணவன் தான்! ஆனாலும், என்னிடம் பயிற்சி பெற்றவன் என்பதை மறந்துவிடாதே ஒருவேளை, உன் பயிற்சிக்கூடம் மட்டும் தான் இருக்க வேண்டுமென நீ நினைத்தால் என்னுடன் வாள் போருக்கு வா. இருவரும் போரிடுவோம். நீ ஜெயித்துவிட்டால் உன் கூடம் மட்டும் மதுரையில் இருக்கட்டும்.

நான் எனது பள்ளியை மூடிவிடுகிறேன் என்றார். ஆணவம் மிக்க சித்தன் இந்தச் சவாலை ஏற்றான்.

இதோடு குருவைத் தொலைத்து விடலாம் அதன் பிறகு மதுரையில் நமது ராஜ்யமே நடக்கும். குருபத்தினியையும் எளிதில் அடைந்துவிடலாம் என்பது அவன் கணக்கு. சண்டை துவங்கியது.

சிறிது நேரம் அவனை ஆடவிட்டார் ஆடல் அரசன் ஆரம்பத்தில் இருந்தே சோமசுந்தரரின் கை ஓங்கியிருந்தது. ஆம் அவரை எதிர்க்க அசுரர்களே இல்லாதபோது, இம்மாதிரி மானுட ஜென்மங்கள் என்ன செய்யமுடியும்?

குரு துரோகி!

சித்தன் திணறினான். அவனது அங்கங்கள் சோர்ந்தது, அவனது வாள் பறந்தது சோமசுந்தரர் அவன் முன்னால் ஆவேசத்துடன், அடே குரு துரோகி! குருவின் பத்தினியையை அடையவா ஆசைப் பட்டாய். அவளை எப்படியெல்லாம் வர்ணித்தாய். அவளை ரசித்துப் பேசிய உன் நாக்கு இனி இருக்கக்கூடாது, என்று நாக்கைத் துண்டித்தார்.

ரத்தம் வழிய வழிய வலி தாளாமல் அவன் மண்ணில் விழுந்து புரண்டான். எம்பெருமான் அவனை விடவில்லை. அடே துரோகி! குருவின் மனைவியை கையைப் பிடித்து இழுத்தது? இந்தக் கைதானே இந்தக் கை தானே அவளை அணைக்க முயன்றது, என்று சொல்லி இரண்டு கரங்களையும் துண்டித்தார். சித்தன் அலறினான்.

ரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. இந்தக் கால்கள் தானே குரு இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்றன, என்று சொல்லி கால்களைத் துண்டித்தார். அவனது உடல் துடித்தது. சித்தனின் ஆவி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.

பின்னர் குரு வேடத்தில் இருந்த சோமசுந்தர பெருமான் மறைந்துவிட்டார் இதை கூடிநின்று பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குருவின் இல்லத்திற்கு சென்றனர்.

அங்கு அவர் இல்லை. அவர் எங்கு சென்றிருப்பார் என அறியாத அவர்கள், அவரது மனைவி மாணிக்கமாலையிடம், குருநாதர் இப்போதுதான் சித்தனை வெட்டிச் சாய்த்தார்.

அதன்பிறகு அவரைக் காணவில்லையே. இங்கு வந்தாரா? என கேட்டனர். மாணிக்கமாலை அதிர்ந்து போனாள்.

அவர் அப்படி செய்பவர் அல்ல; மாணவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவனை கொலைசெய்யும் அளவுக்கு துணியமாட்டார். சற்று நேரத்திற்கு முன்வரை அவர் இங்குதான் இருந்தார். நீங்கள் குறிப்பிடுகிற நேரத்தில் வீட்டில் இருந்த அவர் சித்தனை எப்படி வெட்டியிருக்க முடியும்? கோயிலுக்கு அவர் சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார், என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குரு வீட்டிற்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவம் பற்றி மக்கள் கூறினர். வியப்படைந்த அவர்

என் மாணவனை நானே கொல்வேனா? என்னை வஞ்சிக்க நினைத்த அவனை சோமசுந்தர பெருமானே சம்ஹாரம் செய்திருக்கிறார் என்றுதான் கருதுகிறேன். எனது வடிவில் அவர் வந்திருக்கிறார், என பரவசத்துடன் கூறினார். இந்த சம்பவம் ஊரெங்கும் பரவியது. குலோத்துங்க மன்னனின் காதுக்கும் விஷயம் எட்டியது.

சோமசுந்தர பெருமானின் அருளை பெற்றவர்கள்

அந்த தெய்வ தம்பதியரை பார்ப்பதற்காக அவன் அவர்களது இல்லத்திற்கே விரைந்தான். அந்த தம்பதியர் மன்னனின் காலில் விழுந்து வரவேற்க சென்றனர். அதை தடுத்த மன்னன், நீங்கள் இருவரும் சோமசுந்தர பெருமானின் அருளை பெற்றவர்கள். உங்களுக்காக அவர் சித்தனுடன் போராடி அவனை அழித்துள்ளார்.

இப்படி அவரது பேரருளைப் பெற்ற நீங்கள் எல்லோராலும் வணங்கப்படும் தகுதியை அடைந்திருக்கிறீர்கள். நான்தான் உங்களிடம் ஆசி பெற வேண்டும், எனக்கூறி, அவர்களது பாதங்களில் விழுந்தான். மேலும் குருவுக்கு பசுக்களையும் நிலமும் தானமாக அளித்தான். அவர்களை யானையில் அமரவைத்து ஊர் முழுவதும் பவனி வரச்செய்தான்.

பெண்களை குறைத்து மதிப்பிட்டு இழிவுபடுத்துபவர்களை அங்கம் வெட்ட என்னப்பன் சிவன் வருவார்…. ஓம் சிவாய நம

Thankyou

…மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்

shiva

Recent Posts

எறிபத்த நாயனார் புராணம் | Eripatha Nayanar HiStory

எறிபத்த நாயனார் புராணம் | Eripatha Nayanar HiStory இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்! 63 நாயன்மார்களில் மென் தொண்டர்களும்…

9 months ago

அமர்நீதி நாயனார் வரலாறு | Amarneethi Nayanar History

அமர்நீதி நாயனார் வரலாறு | Amarneethi Nayanar History அமர்நீதி நாயனார் குருபூசை அமர்நீதியார் குருபூசை ஆனி மாதம் பூரம்…

9 months ago

விறன்மிண்ட நாயனார் வரலாறு | Viranmindar History

விறன்மிண்ட நாயனார் குருபூசை விறல்மிண்ட நாயனாரின் குருபூசை  சித்திரை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. விறன்மிண்ட நாயனார் வரலாறு சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில்…

9 months ago

திருத்தொண்டர் தொகை | thiruthondar thogai

திருத்தொண்டர் தொகை தில்லைவாழ் அந்தணர் சருக்கம் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்!  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்!இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!  இளையான்றன்…

9 months ago

மெய்ப்பொருள் நாயனார் புராணம் | meiporul nayanar history

மெய்ப்பொருள் நாயனார் புராணம் - meiporul nayanar history குருபூசை குரு பூஜை: கார்த்திகை / உத்திரம் அல்லது விருச்சிகம்…

9 months ago

இளையான்குடி மாறநாயனார் வரலாறு – ilaiyankudi maaran history

குருபூசை திருநாள்: இளையான்குடி மாற நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதம் மக நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. சிவ…

10 months ago