இறைவர் திருப்பெயர்: நடராசர், ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.
இறைவியார் திருப்பெயர்: சிவகாமி, சிவகாமசுந்தரி.
தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,திருமாளிகைத்தேவர், பரணதேவ நாயனார், கபிலதேவ நாயனார், கருவூர்த்தேவர், சேரமான் பெருமாள் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருமூலர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற பதி. முதலியோர்,
ஸ்தல புராணம்
‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது.
(இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெயர்பெற்றது.
எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய (சிறு) ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அமைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம் – நுண்ணிய ஞான வெளி.இது தஹராகாச க்ஷேத்திரமாதலால் சிதம்பரம் (சித் + அம்பரம் – சித்தமாகிய பெருவெளி) என்று அழைக்கப்படுகிறது.
முன்னொருகாலத்தில் மத்தியந்தனமுனிவர் என்பவர், தாம் தவஞ்செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவுநூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார்.
பிள்ளையின் விருப்பத்தையுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக்கண்டு பெருமகிழ்வு கொண்டார்.
அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர், தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம்மலர்களுள் பழையனவும் பழுதுபட்டனவுமான மலர்கள் கலந்து இருக்கக் கண்டு வருந்தினார்.
பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின் றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம்செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை, மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார்.
முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களையுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்” என வேண்டினார்.
எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டியவண்ணம் வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்றுமுதல் அவர் வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார்.
இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவே நீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடையதாயிற்று.
வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தனமுனிவர் தில்லையையடைந்து வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிர பாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி. இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த. தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச்சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார். பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்தனர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு உணவையுண்ணாது பசிதாங்காது. அழுவதாயிற்று. அதுகண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து வேண்டினர்.
எல்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார், உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது. வியாக்கிரபாதர் சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார்.
இத்தில்லையம் பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன்கண்ணே தான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார்.
திருமால், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொண்டு தேவதாரு வனத்தில் தாம்கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப்புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையாயிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெருமகழ்ச்சிக்கக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெருவேட்கை அடைந்தான். ஆதிசேடன் தன்மகன் அனந்தன் என்பவனைக் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், “எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் கோண்டு உள்ளான்.
உன்னைப்போன்றே எனது திருக்கூத்துனைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள்புரிவோம்” என்று கூறி மறைந்தருளினார்.
ஆதிசேடன் பதஞ்சலி முனியாகிப் புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும். திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான்.சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார்.
அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகின்றது. திருமால்,பிரமன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான்.அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.
மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…
தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…
சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…